ஆப்கான் பூகம்பம்; இதுவரை 1,000 இற்கும் அதிகமானோர் மரணம்

0
17

ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற சக்திவாய்ந்த பூகம்பத்தில் இதுவரை 1,000 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டு பெரும் எண்ணிக்கையானோர் காயமடைந்துள்ளனர்.

நேற்று புதன்கிழமை அதிகாலையில் கிழக்கு ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் சில பகுதிகளில் 6.1 ரிச்டர் அளவில் இந்த பூகம்பம் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது சுமார் 51 கிலோமீற்றர் ஆளத்தில் இடம்பெற்றிருப்பதாகவும் அது கூறியது.

உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சுமார் 1,500 இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

பக்டிகா மாகாணத்தில் தூக்குப் படுக்கைகளில் மக்கள் அழைத்துச் செல்லப்படுவதும், வீடுகள் இடிந்து தரைமட்டமாக்கப்பட்டிருப்பது சமூக ஊடகத்தில் பகிரப்பட்ட படங்களில் தெரிகிறது.

வட கிழக்கு நகரான கோஸ்டில் இருந்து சுமார் 44 கிலோமீற்றர் தொலைவிலேயே இந்த பூகம்பம் தாக்கியுள்ளது. இதன் அதிர்வு 500 கிலோமீற்றருக்கு அப்பால் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிலும் உணரப்பட்டிருப்பதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நிலஅதிர்வு மையம் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு கூறியுள்ளது.

இதன் அதிர்வை ஆப்கான் தலைநகர் காபுல் மற்றும் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலும் உணரப்பட்டிருப்பதாக அங்கிருப்பவர்களை மேற்கோள்காட்டி அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.

‘வலுவான மற்றும் நீண்ட நடுக்கம் உணரப்பட்டது’ என்று 200 கிலோமீற்றருக்கு அப்பால் இருக்கும் காபுல் நகர குடியிருப்பாளர் ஒருவர் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

‘துரதிருஷ்டவசமாக கடந்த இரவு பக்திகா மாகாணத்தின் நான்கு மாவட்டங்களில் சக்திவாய்ந்த பூகம்பம் ஒன்று இடம்பெற்றது. இதனால் எமது நாட்டில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டு மற்றும் காயமடைந்திருப்பதோடு பல டஜன் கணக்கான வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன’ என்று அரச பேச்சாளர் பிலால் கரீமி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

‘மேலும் பேரழிவு ஏற்படுவதை தவிர்ப்பதற்கு அனைத்து உதவி நிறுவனங்களும் உடனடியாக அந்தப் பகுதிக்கு குழுக்களை அனுப்பும்படி நாம் வலியுறுத்துகிறோம்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெரும்பாலான மக்கள் உறக்கத்தில் இருந்த அதிகாலை வேளையிலேயே இந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதியில் மண், கல் மற்றும் ஏனைய பொருட்களை பயன்படுத்தியே வீடுகள் கட்டப்படுவதாகவும் கொங்கிரீட் வீடுகள் மிகக் குறைவாகவே இருப்பதாகவும் அங்கிருக்கும் செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது குறித்து கூறியுள்ள தாலிபான் நிர்வாகத்தில் பேரிடர் முகாமைத்துவ ஆணையத்தின் தலைவர் முகமது நசிம் ஹக்கானி “பெரும்பாலான உயிரிழப்புகள் பக்திகா மாகாணத்தில் நடந்துள்ளது. இந்த பக்திகா மாகாணத்தில் 400 பேர் வரை உயிரிழந்திருக்கலாம், 250 பேர் காயமடைந்திருக்கலாம். கிழக்கு மாகாணங்களான நான்கார்ஹார், கோஸ்ட் ஆகிய பகுதிகளிலும் உயிரிழப்புகள் நடந்துள்ளது” எனத் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் கடந்த ஓகஸ்ட் மாதம் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியது தொடக்கம் அந்த நாடு பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் நிலையிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

தலிபான்கள் ஆட்சிக்கு வந்ததால் பல அரசுகள் ஆப்கான் வங்கித் துறை மீது தடைகளை விதித்ததோடு பல பில்லியன் டொலர் பெறுமதியான அபிவிருத்தி உதவிகளையும் நிறுத்தின.

பூகம்பங்கள் ஆப்கானில் பெரும் சேதங்களை விளைவிப்பதாக உள்ளன. குறிப்பாக வலுவான அல்லது சிறந்த முறையில் கட்டப்படாத கட்டடங்களைக் கொண்டிருக்கும் தொலைதூரப் பகுதிகளில் இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும்.

ஆப்கானில் கடந்த 10 ஆண்டுகளில் பூகம்பங்களால் 7,000 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருப்பதாக மனிதாபிமான விவிவகாரங்களின் இணைப்பகத்துக்கான ஐ.நா அலுவலகம் தெரிவித்துள்ளது. இதன்படி அந்த நாட்டில் பூகம்பங்களால் ஓர் ஆண்டில் சராசரியாக 560 பேர் உயிரிழக்கின்றனர்.

இந்திய தட்டு என்று அறியப்படும் டெக்டோனிக் தட்டு ஒன்று யுரேசியன் தட்டுக்குள் வடக்காகத் தள்ளுவது, தெற்காசி பிராந்தியத்தில் அதிக நில நடுக்கம் ஏற்படக் காரணமாகியுள்ளது.

தொலைதூர ஆப்கான் வடகிழக்கு பகுதியில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்தில் ஆப்கான் மற்றும் அண்டைய பாகிஸ்தானில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here