வீரப்பனின் அண்ணன் மாதையன் சிறுக சிறுக கொல்லப்பட்டார் ராமதாஸ் இரங்கல்

0
78

சேலம்: சந்தனக் கடத்தல் வீரப்பனின் அண்ணன் மீசை மாதையன் சேலம் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக சிறைவாசம் அனுபவித்த நிலையில் உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ராஜ்யசபா எம்.பி. அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தென்மாநிலங்களில் போலீசாருக்கு சிம்ம சொப்பணமாக இருந்தவர் சந்தனக் கடத்தல் வீரப்பன். தமிழகம், கர்நாடகா, கேரளா மாநில போலீசாருக்கு 25 ஆண்டுகாலமாக கண்ணாமூச்சி கட்டி வந்தவர் வீரப்பன். 2004-ம் ஆண்டு தமிழக அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார் வீரப்பன்.
வீரப்பனின் அண்ணன் மாதையன், பல்வேறு வழக்குகளில் போலீசாரால் தேடப்பட்டு வந்தார். இந்த நிலையில் 1987-ம் ஆண்டு மாதையன் கைது செய்யப்பட்டார். பின்னர் கர்நாடகா போலீசாரும் மாதையனை வழக்கு ஒன்றில் கைது செய்தது. இவ்வழக்குகளில் மாதையனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

7

காலமானார் மாதையன்
கோவை மற்றும் சேலம் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த மாதையனுக்கு நீண்டகாலமாக உடல்நலன் பாதிப்பு இருந்து வந்தது. இதனால் அவ்வப்போது சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வந்தார். மேலும் மாதையனின் உடல்நலனை கருத்தில் கொண்டு பரோலும் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மாதையனின் உடல்நலன் மிகவும் மோசமடைந்த நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று மாதையன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இத்தகவல் அவரது மனைவி மாரியம்மாள் மற்றும் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

ராமதாஸ் இரங்கல்
மாதையன் மறைவுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ராஜ்யசபா எம்.பி.யும் பாமக இளைஞரணித் தலைவருமான அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட இரங்கல்: 35 ஆண்டுகளாக சிறையில் வாடிய வீரப்பனின் மூத்த சகோதரர் மாதையன், அவரது உடல் நல பாதிப்புக்கு சேலம் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல். மாதையன் எந்தக் குற்றமும் இழைக்கவில்லை. அவர் பொய்வழக்கில் தான் சிக்க வைக்கப்பட்டார். அப்போதைய சூழலும், பொதுப்புத்தியும் அவருக்கு தண்டனை பெற்றுத் தந்தன. ஆனாலும், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மாதையனை 35 ஆண்டுகளாக சிறையில் அடைத்து வைத்தது மனித உரிமை மீறல்! மாதையனை விடுவிப்பது குறித்து அரசு பரிசீலிக்கலாம் என்று உயர்நீதிமன்றமே ஆணையிட்ட பிறகும், அவர் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்… அதனால் சிறுக, சிறுக கொல்லப்பட்டார். மனிதநேயமற்ற அரசு எந்திரம் தான் அவரது இறப்புக்கு பொறுப்பேற்க வேண்டும்! இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

நெடுமாறன் இரங்கல்
தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் வெளியிட்டுள்ள இரங்கல்: வீரப்பனின் அண்ணன் மாதையன் 33 ஆண்டுக் காலம் சிறையில் இருந்து சிறையிலேயே மரணம் அடைந்த சோகச் செய்தி என்னை உலுக்கிவிட்டது. குற்றச்செயல் எதிலும் ஈடுபடாமல் எளிய விவசாயாக வாழ்ந்தவர் மாதையன். வீரப்பனைப் பிடிக்க முடியாத கோபத்தில் இவரைப் பிடித்து இவருக்குச் சற்றும் தொடர்பில்லாத ஒரு வழக்கில் சிக்க வைத்து ஆயுள் தண்டனை விதித்தனர். வீரப்பனால் பிடித்துச் செல்லப்பட்ட கன்னட நடிகர் இராஜ்குமாரை வீரப்பனிடம் பேசி நாங்கள் விடுவித்த போது, தன்னுடைய அண்ணன் மாதையனின் நிலையை எடுத்துக்கூறி உதவும்படி வீரப்பன் வேண்டிக்கொண்டார். அதற்கிணங்க மாதையனைச் சிறையில் சந்தித்துப் பேசி சட்டரீதியாக அவரை விடுவிப்பதற்குப் பல முயற்சிகள் செய்தோம். ஆனாலும் வெற்றி கிடைக்கவில்லை. இறுதியாகச் சிறையிலேயே தனது உயிரை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற நிலை யாருக்கும் வரக்கூடாது. மாதையனின் குடும்பத்தினரின் துயரை நானும் பகிர்ந்துக் கொள்கிறேன். இவ்வாறு நெடுமாறன் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here